Thursday, October 8, 2009

விவாதம்: ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் ஒருங்கிணைவிற்கு தடை யாரால்? - 5


சர்வதேசியவாதிகள் :
//////இந்திய கட்ட‌மைப்பு புரட்சிகரமானதா ! என்ன சொல்கிறீர்கள் ?//////

தற்பொழுது உள்ள இந்தியக் கட்டமைப்பு புரட்சிகரமானது என்று நாம் கூறவில்லை.

தற்பொழுது கட்டியெழுப்பப்பட்டுள்ள, இந்தி ஆதிக்க பார்ப்பன பனியாக்களின் கட்டமைப்பான இந்தியக் கட்டமைப்பு, தகர்க்கப்பட்டட பின்னர், ”புரட்சிகரமான” ஒரு ”இந்தியா”வை உருவாக்க விரும்பும் தங்களைப் போன்றவர்களின் கனவை தான் நாங்கள் சந்தேகிக்கிறோம்...அது முடியாதெனவும் சொல்கின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியா என்ற பெயரில், தம் தேசிய இனத்தின் ஆதிக்கத்தை இழப்பதற்கு இந்திக்காரர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பது தான் உண்மை. ஒருவேளை இந்தித் தேசிய இனத்தின் “புரட்சிகர” பாட்டாளி வர்க்கத்தை ம.க.இ.க.வினர் தட்டி எழுப்பி, அப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியாவை படைப்போம்” என்று வாதிட்டாலும் அது நடைமுறைக்கு ஒவ்வொததாகவே காட்சியளிக்கிறது.

//////////////இந்திய தேசியத்தை நாம் முறியடிக்க வேண்டுமானால், நம்மைப் போல ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தேசிய இனங்களுடனும் ஐக்கியப்படுவது ஒன்றே சாத்தியம். இதற்கு மாற்றான வழிமுறை இல்லை என்பதே எமது கருத்து.//////////////

புரட்சியாளர் லெனின் தலைமையில் ரசியப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் இயங்கியக் கொண்டிருந்த போது, ரசியப் புரட்சி நடந்தவுடன், பின்லாந்து பிரிந்து போக விரும்பியது ஏன்?

அப்பொழுது கூட, ”பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உடைகின்றது, ஏகாதிபத்தியம் உங்களை ஏப்பம் விட்டு விடும், அதனால் பிரிநது போகாதீர்!” என்று புரட்சியாளர் லெனின் அப்பொழுது ம.க.இ.க.வைப் போல வறட்டுவாதம் பேசவில்லை. மாறாக, ரசியப் பாட்டாளி வர்க்கத்தின் கீழ் இயங்க விரும்பாத அந்நாட்டை பிரிந்து செல்லுங்கள் என வழிவிட்டார். அப்பிரிவினையை ஆதரித்தார். இது தான் லெனின் வகுத்தளித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம். ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போக முடிவெடுத்தால், அதனை ஒடுக்கும் இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தன் நடைமுறையின் மூலம் வலுப்படுத்தினார் புரட்சியாளர் லெனின்.

ஆனால், தற்பொழுது ம.க.இ.க. போன்ற சக்திகள், ஏகாதிபத்தியத்தைக் காரணம் காட்டியும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு எதிரானது இது என்று சொல்லியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தமக்கென்று ஒரு தேசம் அமைத்துக் கொள்ள உள்ள தேசிய இனங்களுக்குள்ள பிறப்புரிமையை தடுக்கின்றனர். அவதூறு செய்கின்றனர். ஒடுக்குகின்ற இனத்தைக் கூட இனங்காண மறுக்கின்றனர்.

இந்தித் தேசிய இனத்துடனும், மற்ற அயல் தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசிய இனம் ஐக்கியம் பேண வேண்டும் என்று விரும்பினால், தமிழ்நாட்டைப் போல ஓரளவாவது தேசிய இன உரிமைகளை பேசக்கூடிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளை மற்ற தேசிய இனங்களில், ம.க.இ.க. போன்ற ”அகில இந்தியப் புரட்சி” கனவு காணும் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை யார் தடுத்தார்? ஏன் இதனை இவர்களால் செய்ய முடியவில்லை? உத்திரப்பிரதேசத்திலும், ஹரியானாவிலும் சென்று இந்தித் தேசிய இன மக்களிடம் பாட்டாளி வகுப்பு சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுங்கள். யார் தடுத்தது?

கடந்த மாதம் கூட, தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான ”தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க”த்தின் மாநாடு ஈரோட்டில் நடந்தது. அதில் கேரளாவிலிருந்து ”போராட்டம்”(ஸட்ரகல்) என்ற அமைப்பு, காநாடகவிலிருந்து ”கருநாடக ஜனபரவேதிகே”, மணிப்புரிலிருந்து ”மனாப் அதிகார் சுரக்ஷா ணமிதி”, நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர். கர்நாடக, கேரள அமைப்புகளுடன், அத்தேசிய இனத்தவருடனான நதிநீர் பங்கீட்டு சிக்கல்களில் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், கூட அவ்வமைப்புகளின் ”தேசிய இன முன்னுரிமை”, ”மனித உரிமை” போன்ற தளங்களில் ஒன்றுபட்டு உழைத்திட தமிழ்த் தேசிய அமைப்புகள் தயாராகவே இருக்கின்றன.

1990களில் தமிழ்நாட்டில் ”தன்னுரிமை” முழக்கங்கள் எழுந்த போதும் அதன் பின்னர் நடந்த பல கூட்டங்களிலும், இவ்வாறு அண்டைத் தேசிய இனத்திலுள்ள போராட்ட இயக்கங்களை தமிழ்த் தேசிய அமைப்புகள் அங்கீகரித்து, அவற்றை அரவணத்துக் கொண்டே வந்திருக்கின்றன.

”அனைத்திந்தியப் புரட்சி” பேசுகின்ற ம.க.இ.க. போன்ற சீர்குலைவு சக்திகள், இது போன்ற தேசிய இனங்களுடனான குறைந்த பட்ச ஒருங்கிணைப்பு, குறைந்த பட்ச பொது வேலைத் திட்டம் என்பதைக் கூட வைக்காமல், அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு தம் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பியும், ”இனவாத” முத்திரை குத்தியும் தம் அணிகளை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்கின்றன.

/////////இந்த ஒடுக்குமுறைக்குள்ளியிலிருந்து தேசிய‌ இனங்கள் அனைத்தும் விடுதலை பெற‌‌ வேண்டுமானால் ஒடுக்குமுறையாளனான இருக்கும், அனைத்து மக்களுக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்திய தேதியத்துக்கு எதிராக தமக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் தனி ஒரு தேசிய இனம் மட்டும் இதை எதிர்த்து போராடி விடுதலை பெற முடியாது. இதற்கான உதாரணம் தான் காஷ்மீரும்,வடகிழக்கு மாநிலங்களும். //////////

தேசிய இனங்களிடையே பகைமையை உண்டாக்குவதும், வளர்த்து வருவதும் இந்திய அரசு தான் என்று யாருக்குத் தெரிந்திருக்கிறது? தமிழினம் போன்ற, அப்பகைமையால் பாதிப்புக்குள்ளாகும் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.

ஆனால், இவற்றை உணராமல் இந்திய அரசின் இனவெறிக்கும், பிரித்தாளும் பகைமைக்கும் இரையாகி தம் தேசிய இன நலன்களைப் பேணுகின்ற அண்டைத் தேசிய இனங்களை நாம் கண்டிக்கவே கூடாது?

அப்படி கண்டித்தாலே அது ”இனவாதம்” என்றாகிவிடுமா? கன்னடர்களையும் மலையாளிகளையும் இந்திய அரசின் இனவெறிப் போக்கிற்கு பலியாகிவிடாதீர் என்று தானே கண்டிக்கிறோம். அதனை கூட கண்டித்தால் ”குறுந்தேசியஇனவெறி” என்று, இங்கிருந்து கொண்டு கூச்சலிடும் உங்களது வாதங்களை தான் நாம் சந்தேகிக்கிறோம். அது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு சாதகமானது என்று கூறுகிறோம்.

கேரளாவிலும், ஆந்திரத்திலும் இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் சூழ்ச்சிக்கு எதிராக இதுவரை எந்த சிறு குரல்களும் எழவில்லை? ஏன்? இவ்வாறு குரல்கள் எழுவதை யார் தடுத்தார்? ம.கஇ.க.வினர் சென்று முல்லைப் பெரியாற்றில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொண்ட ”புரட்சிகர” கேரளப் பாட்டாளி வர்க்கத்தைத் தட்டி எழுப்பட்டுமே யார் தடுத்தது? இவற்றை செய்வதற்கான துணிவோ, முன்முயற்சியோ உங்களுக்கு இல்லை. மாறாக, தமிழ்த் தேசிய இன உரிமைக்குப் போராடுகின்ற அமைப்புகளை ”இனவாதிகள்” என்று அவதூறு செய்வதற்குத் தான் உங்களைப் போன்றோர்க்கு நேரமிருக்கிறது. அவ்வாறு கூறி, தம் சொந்த அணிகளை திருப்தி படுத்திக் கொண்டு சுயஇன்பம் காணவும் பிடித்திருக்கிறது.

அயல் தேசிய இனங்களில் ஏற்கெனவே உள்ள ”புரட்சிகர” அமைப்புகளையோ, கட்சிகளையோ, அரவணத்துக் கொள்வதற்கும், புதிய புரட்சிகர அமைப்புகளை உருவாக்குவதற்கும் உங்களுக்கு வக்கில்லை, நேரமில்லை, மாறாக தமிழினத்தின் உரிமை பறிபோகிறதே என்று குரல் கொடுக்கும் தேசிய இன அமைப்புகள் மீது ”இனவாத” முத்திரை குத்துவதோடு உங்களது ”புரட்சிகர” பணி சுருங்கி விடுகிறதே... இது ஏன்..? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்?

சத்தீஸ்கர், ஆந்திரம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாவோயிஸ்டுகள், மக்கள் யுத்தக் குழுவினர் உள்ளிட்ட போராளி அமைப்புகளில் யாருடனாவது உங்களுக்கு தோழமை உண்டா? எல்லோரையும் சகட்டு மேனிக்கு ”விமர்சனம்” என்ற பெயரில் அவதூறு செய்து விட்டு இறுதியில் ”இந்தியப் புரட்சி” என்ற கனவுடன், தனிமைப்பட்டிருப்பது நீங்கள் தான். இது தான், நீங்களே சொல்லுகின்ற ”அனைத்திந்தியப் புரட்சி”யின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை போலும்.

தனித்து தேசிய இனங்கள் போராடி வெற்றி பெற முடியாது என்று சொல்லும் நீங்கள், முதலில் தமிழ்த் தேசிய இனத்துடன் போராட முன் வரும், புரட்சிகர அண்டைத் தேசிய இனப் பாட்டாளி வர்க்கங்களை அடையாளம் காட்டுங்கள். ”ஐக்கியத்தை” பற்றி சிறிதாவது சிந்திக்கலாம்.. அதை விட்டுவி்ட்டு, தமிழ்த் தேசிய அமைப்புகளை, ”குறுந்தேசியஇனவெறி”, ”இனவாதம்” என்றெல்லாம் கூறி இழிவுபடுத்தும், இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்பு போல நின்று கூச்சலிடாதீர்கள்...

////////ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை பெற்ற ஒரு நாடாவது இன்று உலகில் இருக்கிறதா ? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.//////////

ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாத தேசிய இன விடுதலை கிடையாது என்று சொல்கின்ற நீங்கள், யார் சார்பாக இக்கருத்தை வைக்கிறீர்கள்? ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர் கொள்கின்ற வலிமை மிக்கப் போராட்டங்களைக் கட்டமைத்து விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எமது நோக்கமே அன்றி, ”ஏகாதிபத்தியம் தலையீடு செய்யும்” என்று பயந்து கொண்டு, பம்மிக் கொண்டு, மார்க்சியத்தின் பெயரைச் சொல்லி தேசிய இன விடுதலைப் போரை பின்னுக்குத் தள்ளி விடுவது அல்ல.

சர்வதேசியவாதிகள்:

//////////////////இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல.///////////////

காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகவும், பிற தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு செயல்பட்டு தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகிறது என்ற நாம் கூறினோம். அதற்கு பதிலாக நீங்கள் சொன்னது தான் மேற்கண்டது. ”இது முழு உண்மை அல்ல. அதே அளவிற்கு முழு பொய்யுமல்ல”....

”இது முழு உண்மை அல்ல” என்ற கூற்றின் மூலம், நதிநீர் சிக்கல்களில் தமிழ்த் தேசிய இனத்தை இந்திய அரசு ஒடுக்குகின்றது என்பதை நீங்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது. அதே போல், பிற தேசிய இனத்திற்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை என்பதையும் நீங்கள் ”உண்மையல்ல” என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

வாய்ப்பு வசதிக் கருதி, எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் ”இது பொய்யுமல்ல” என்றும் கூறி மழுப்பியிருக்கிறீர்கள்.

அதே போல, அதாவது மற்ற தேசிய இனங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளவில்லை. எனவே //////////////// இங்கு எந்த தேசிய இனமும் ஒடுக்கப்படாமல் இல்லை, அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன.//////////////// என்றும் கூறியிருக்கின்றீர்....

அதாவது உங்களது கூற்றுகளின் சாரம் கீழ்க்கண்டது தான் என வரையறுக்கிறேன்.

”இந்திய அரசு வேறு தேசிய இனங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை. அனைத்து இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றன”

இவ்வாறெனில், இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழினத்தை ஒடுக்கி வருவதற்குக் காரணம் அதன் ஆரிய இனச் சார்பு தான் என்கிறோம். ”நீங்கள் அதெல்லாம் கிடையாது” பொருளாதாரம் தான் காரணம் என்று வாதிடுகிறீர்.

பொருளாதார நோக்கம் தான் காரணம் என்றால் இந்திய அரசு இவ்வாறு பகைமையை உண்டாக்கி, அதன் ஆளும் வர்க்கங்கள் தொழி்ல் நடத்துவதற்குத் தேவையான அமைதியான நிலைமையை கெடுத்துக் கொள்ளாது. இதனை ஏற்கிறீரா? இல்லையா?

”காசுமீர், மணிப்புர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இந்தியப் பாசிச அரசு செலுத்துகின்ற ஆயுதந்தாங்கிய ஒடுக்குமுறைகளை விட, தமிழினம் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது” என்று நான் எங்காவது குறிப்பிட்டிருக்கிறேனா? எடுத்துக் காட்ட முடியுமா?

அங்கு நடைபெறுகின்ற தேசிய இனப் போராட்டங்களைப் போல தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டம் வீறு கொள்ள வேண்டும் என்று தான் நாம் சொல்கிறோமே தவிர, அங்கு நடைபெறுகின்ற ஒடுக்குமுறையைவிட தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுகின்றது என்பதனை நாம் எங்கேயும் சொன்னதில்லை. ஆனால், நீங்கள் இதனை திரித்து எழுத வேண்டியதன் நோக்கம் என்ன...?

முதலில்,

”அனைத்து தேசிய இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றது” என்று சொன்னீர்கள்,

”தமிழினத்திற்கு ஒடுக்குமுறையின் தன்மை அதிகம்” என்று சொன்னீர்கள்,

அதெல்லாம் கூறிய நீங்கள் இப்பொழுது என்னவென்றால், ”ஈழத்தமிழர்களைப் போல, காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதி தேசிய இனத்தவர்கள் போல தமிழர்கள் ஒடுக்கப்படவில்லை” என்கிறீர்கள்,

இவ்வாறு கூறுவதன் மூலம் இரண்டு விடயங்களை உங்களது எழுத்துகளிலிருந்து உணர முடிகின்றது.

ஒன்று, ”ஆயுதம் தாங்கி ஒடுக்கினால் மட்டும் தான் அது தேசிய இன ஒடுக்குமுறை, அங்கு மட்டும் தான் தேசிய இன விடுதலையை முன்னிறுத்தி போராட வேண்டும்....” என்று கூற முற்படுகிறீர்கள்..

இரண்டு, ”அவ்வாறு ஆயுதம் தாங்கிய ஒடுக்குமுறை தமிழகத்தில் இல்லாத காரணத்தினால், தமிழ்நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டம் தேவையற்றது, தமிழர்கள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை தான் நடத்த வேண்டும்” என்கிறீர்கள்...

அதாவது இந்திய ஆளும் வர்க்கங்கள் கூறுவது போல, ”தமிழ்நாட்டில் மக்களெல்லாம் நன்னாத்தான் இருக்கேளே... அவாளுக்கு ஏன் நாடு வேணும்... நமக்குக் கீழேயே கிடக்கட்டும்..” என்ற கருத்தை தான் மர்க்சிய சாயமடித்து நீங்கள் சொல்ல வருகின்றீர் என்பதும் புரிகின்றது.....

9 Comments:

At October 9, 2009 at 5:18 AM , Anonymous Anonymous said...

////////ஏகாதிபத்தியத் தலையீடு இல்லாத தேசிய இன விடுதலை கிடையாது என்று சொல்கின்ற நீங்கள், யார் சார்பாக இக்கருத்தை வைக்கிறீர்கள்? ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர் கொள்கின்ற வலிமை மிக்கப் போராட்டங்களைக் கட்டமைத்து விடுதலையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எமது நோக்கமே அன்றி, ”ஏகாதிபத்தியம் தலையீடு செய்யும்” என்று பயந்து கொண்டு, பம்மிக் கொண்டு, மார்க்சியத்தின் பெயரைச் சொல்லி தேசிய இன விடுதலைப் போரை பின்னுக்குத் தள்ளி விடுவது அல்ல///////////

நாம் இன்றைய உலகில் அனைத்திலும் ஏகாதிபத்திய
தலையீடு என்கிற புற நிலை எதார்த்தத்தை உள்ளதை
தான் சொல்கிறோம். ‘விடுதலை’ என்கிர பெயரில்
பிரிந்து சென்ற அனைத்து நாடுகளும் ஏகாதிபத்திய
தலையீட்டின் காரணமாகத் தான் பிரிந்து சென்றுள்ளன.
தற்போது அவை அனைத்தும் ஏகாதிபத்தியத்திற்கு
அடிமை நாடுகளாகவே செயல்பட்டு வருகின்றன.
இல்லை ஏகாதிபத்திய தலையீடு இல்லாமல் விடுதலை
அடைந்த நாடு உண்டு எனில் ஒன்றை சொல்லுங்களே
பார்ப்போம்.

ஏகாதிபத்தியத்தை பணிய வைக்கின்ற, எதிர்
கொள்கின்ற போராட்டங்களா??? இதை ஈழத்தில்
புலிகள் செய்யவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு.
சரி உங்களை ஈழத்தில் உள்ள தமிழ் தேசிய
கோரிக்கையை முன்மொழிந்த தமிழ் தேசியவாதிகளோடு
ஒப்பிடுவது சற்று மிகை, எனவே இந்தியாவில்
ஏகாதிபத்தியத்துக்கு எதிராக புயலாக எழுந்த தமிழ்நாட்டு
தமிழ் தேசியவாதிகளான உங்களை கேட்கிறோம்.
பிறகு ஏன் நீங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை பற்றி
புலிகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை ?
இந்திய மேலாதிக்கத்துக்கும்,ஏகாதிபத்தியத்துக்கும்
நல்ல பிள்ளைகளாக‌ தோப்புக்கரணம் போட்ட புலிகளை
ஏன் தடவிக் கொடுத்தீர்கள்? அது மட்டுமின்றி அவர்களை
மார்க்சியவாதிகள் என்று கூறி அவர்களின் செயலுக்கு
ஆதரவாக பிரச்சாரமும் செய்தீர்களே அது ஏன் ?
உங்களையும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்பதாலா ?

அமெரிக்கா தலையிடும், ஆப்பிரிக்கா தலையிடும்,
நார்வே தலையிடும், இந்தியா தலையிடும்,
ஈ,காக்கா தலையிடும் என்று ஏன் ஏகாபத்தியத்தையும்
அதன் ஏவல் நாய்களின் காலையும் சுற்றிக் கொண்டிருந்தீர்கள்.
அப்போது மட்டும் ஏகாதிபத்தியத்தை பணியவைக்கும்
போராளிகளுக்கு ஏகாதிபத்தியம் என்ற சொல்லே
நினைவில் இல்லையோ?

//////பொருளாதார நோக்கம் தான் காரணம் என்றால் இந்திய அரசு இவ்வாறு பகைமையை உண்டாக்கி, அதன் ஆளும் வர்க்கங்கள் தொழி்ல் நடத்துவதற்குத் தேவையான அமைதியான நிலைமையை கெடுத்துக் கொள்ளாது. இதனை ஏற்கிறீரா? இல்லையா?////////

தனது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள,
அதற்கு எதிராக எழும் போராட்டங்களை திசை
திருப்புவதற்காகத் தான் ஆளும் வர்க்கம், தேசிய
இனங்களிடையே இனவெறி வாதத்தையும் தூண்டி
விடுகிறது என்றோம். இதன் காரணமாக ஆளும்
வர்க்கங்களின் தொழி்ல் அமைதி கெடும் எனில்
அதை தனது போலீசு, இராணுவத்தை வைத்து
ஒடுக்கி அமைதியை நிலை நாட்டும்.

//////”அனைத்து தேசிய இனங்களும் மிக மிக மோசமாகத் தான் ஒடுக்கப்படுகின்றது” என்று சொன்னீர்கள், ”தமிழினத்திற்கு ஒடுக்குமுறையின் தன்மை அதிகம்” என்று சொன்னீர்கள்,

அதெல்லாம் கூறிய நீங்கள் இப்பொழுது என்னவென்றால், ”ஈழத்தமிழர்களைப் போல, காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதி தேசிய இனத்தவர்கள் போல தமிழர்கள் ஒடுக்கப்படவில்லை” என்கிறீர்கள்,//////////


இப்போதும் சொல்கிறோம், இந்து தேசியத்தின்
கீழ் அனைத்து தேசிய இனங்களும் மிக
மோசமாகத்தான் ஒடுக்கப்படுகின்றன.
ஆனால் அனைத்தும் சம அளவில்
ஒடுக்கப்படுவதில்லை,அதில் வேறுபாடு உள்ளது.
காஷ்மீர்,மணிப்பூர் வடகிழக்கு மக்கள் மற்றைய
மக்களை விட மிக மிக மோசமான முறையில்,
அருவறுப்பான முறையில் ஒடுக்கப்படுகிறார்கள்.
இந்தியாவிலேயே அதிகமாக ஒடுக்கப்படுவது
அவர்கள் தான். அவர்கள் அளவுக்கு தமிழர்கள் மீதும்
ஒடுக்குமுறை செலுத்தப்படுகிற‌து எனில், அந்த
ஒடுக்குமுறையில் எல்லாம் செலுத்தப்படுகிற‌து
என்பதை விளக்கினீர்கள் என்றால் நாங்கள்
புரிந்து கொள்வோம்.

தமிழுக்கும் பார்ப்பனியத்துக்கும் பல காரணங்களால்
வரலாற்று ரீதியான பகை இருந்தது, அது இன்று வேறு
வகைகளில் நீடிக்கிரது என்று தான் கூறியிருந்தோம்.
சில காரணங்களால் சில விசயங்களில்
( காவிரி, மு.பெரியாறு,பாலாறு) தமிழ் இனத்திற்கு
இந்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்று தான்
கூறியிருந்தோம். அதை காஷ்மீர்,வடகிழக்கு மக்களுடன்
கற்பனையாக ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்.

 
At October 9, 2009 at 5:20 AM , Anonymous Anonymous said...

//////தற்பொழுது கட்டியெழுப்பப்பட்டுள்ள, இந்தி ஆதிக்க பார்ப்பன பனியாக்களின் கட்டமைப்பான இந்தியக் கட்டமைப்பு, தகர்க்கப்பட்டட பின்னர், ”புரட்சிகரமான” ஒரு ”இந்தியா”வை உருவாக்க விரும்பும் தங்களைப் போன்றவர்களின் கனவை தான் நாங்கள் சந்தேகிக்கிறோம்…அது முடியாதெனவும் சொல்கின்றோம். ஏனெனில், இப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியா என்ற பெயரில், தம் தேசிய இனத்தின் ஆதிக்கத்தை இழப்பதற்கு இந்திக்காரர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பது தான் உண்மை.ஒருவேளை இந்தித் தேசிய இனத்தின் “புரட்சிகர” பாட்டாளி வர்க்கத்தை ம.க.இ.க.வினர் தட்டி எழுப்பி, அப்படிப்பட்ட ”புரட்சிகர” இந்தியாவை படைப்போம்” என்று வாதிட்டாலும் அது நடைமுறைக்கு ஒவ்வொததாகவே காட்சியளிக்கிறது.//////

இந்தி தேசிய இனம் ஒரு ஒடுக்குகிற தேசிய
இனமாக இல்லை என்பதை உங்களுக்கு முதலிலேயே
சொல்லியிருக்கிறோம், இருந்தும் நீங்கள் அதே பழைய
கண்ணோட்டத்திலேயே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
இந்தி மக்களாகட்டும்,பிகாரி மக்களாகட்டும்.அவர்கள்
அனைவரும் உழைக்கும் மக்கள்.மக்களை
புரட்சிகரமானவர்களாக மாற்றுவது தான் எமது நோக்கம்.
அதற்காக நாங்கள் இங்கிருந்து பிகாருக்கும் வட
இந்தியாவிற்கும் சென்று வகுப்பெடுக்க வேண்டும் என்று
நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். அந்த மாநிலங்களிலும்
புரட்சிகர சக்திகள் இருக்கிறார்கள்.அவர்களோடு நாம்
ஐக்கியத்தை கட்டுவோம் அது எமது பாடு.இந்தியாவின் கீழ்
உள்ள அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும்
களைந்தெறிய வேண்டுமானால் இந்தியாவின் உழைக்கும்
மக்களை அணி திரட்டுவதன் மூலம் தான் அது சாத்தியம்.
மாறாக நாங்கள் எல்லாம் புறநானூற்றுப் பெருமை வாய்ந்த‌
சங்கத்தமிழர்கள், நாங்கள் தனியாகத்தான் வாழ்வோம்
என்று நீங்கள் அடம் பிடிக்கலாம்,ஆனால் வரலாற்றை நாம்
ஆசைப்படுவது போல வளைத்துக்கொள்ள முடியாது.
ஆசைகளும்,கற்பனைகளும் வரலாற்றின் கால ஓட்டத்தில்
கரைந்து கானாமல் போய் விடும். காலத்தை எதார்த்தமாக
அனுகி,மிகையின்றி சாத்தியத்தை உள்வாங்கும் சக்திகளே
வரலாற்றை உருவாக்க முடியும்.

 
At October 9, 2009 at 5:21 AM , Anonymous Anonymous said...

/////புரட்சியாளர் லெனின் தலைமையில் ரசியப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் இயங்கியக் கொண்டிருந்த போது, ரசியப் புரட்சி நடந்தவுடன், பின்லாந்து பிரிந்து போக விரும்பியது ஏன்? அப்பொழுது கூட, ”பாட்டாளி வர்க்க சர்வதேசியம் உடைகின்றது, ஏகாதிபத்தியம் உங்களை ஏப்பம் விட்டு விடும், அதனால் பிரிநது போகாதீர்!” என்று புரட்சியாளர் லெனின் அப்பொழுது ம.க.இ.க.வைப் போல வறட்டுவாதம் பேசவில்லை.மாறாக, ரசியப் பாட்டாளி வர்க்கத்தின் கீழ் இயங்க விரும்பாத அந்நாட்டை பிரிந்து செல்லுங்கள் என வழிவிட்டார். அப்பிரிவினையை ஆதரித்தார். இது தான் லெனின் வகுத்தளித்த பாட்டாளி வர்க்க சர்வதேசியம். ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போக முடிவெடுத்தால், அதனை ஒடுக்கும் இனத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தன் நடைமுறையின் மூலம் வலுப்படுத்தினார் புரட்சியாளர் லெனின்.
ஆனால், தற்பொழுது ம.க.இ.க. போன்ற சக்திகள், ஏகாதிபத்தியத்தைக் காரணம் காட்டியும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கு எதிரானது இது என்று சொல்லியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தமக்கென்று ஒரு தேசம் அமைத்துக் கொள்ள உள்ள தேசிய இனங்களுக்குள்ள பிறப்புரிமையை தடுக்கின்றனர். அவதூறு செய்கின்றனர். ஒடுக்குகின்ற இனத்தைக் கூட இனங்காண மறுக்கின்றனர்//////

உண்மை தான், ஆனால் அதை தோழர் லெனின்
எப்போது செய்தார்? 1917 புரட்சிக்கு பிறகு.
ரஷ்யாவில் புரட்சிக்குப் பிறகு நடந்ததை சம்பந்தமே
இல்லாமல் இங்கு வைத்து ஒப்பிடுவது எப்படி சரியாகும் ?
இன்னும் இங்கு புரட்சியே நடக்கவில்லை என்பதை
உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தமிழ் தேசிய கனவில் நீங்கள் இருப்பீர்களேயானால்
உங்களை நீங்களே கிள்ளிக்கொள்ளுங்கள்.பிறகாவது
யதார்த்த உலகை கண்டு விவாதியுங்கள்.
இங்கு புரட்சி நடந்து முடிந்து ம.க.இ.க என்னவோ
யாரும் பிரிந்து போய்விடாதீர்கள் என்று அனைத்து
தேசிய இனங்களையும் கட்டிப்போட்டு கொல்லுவதைப்
போலவும் சித்தரிக்கிறீர்கள். அதற்கு தோழர் லெனினை
வேறு உதாரணம் காட்டுகிறீர்கள். இதற்கு என்ன பொருள் ?
ம.க.இ.க விற்கு மட்டும் தான் மார்க்ஸியம் தெரியுமா?
எனக்கும் தெரியுமே என்பதை காட்டுவதற்காகவே
சொல்வது போலிருக்கிறது. அதிலும் தப்புதப்பாக
சொல்லியிருக்கிறீர்கள்.பாசிச புலிகளை மார்க்சியவாதிகள்
என்ற கூறிய உங்களுடைய மார்க்சிய அறிவு அனைவரும்
அறிந்ததே.சரி அது போகட்டும் நாம் விசயத்திற்கு வருவோம்.
தோழர் லெனின் சொன்னதை எப்படி பார்க்க வேண்டும்
என்றால், நாளை இங்கு புதிய ஜனநாயகப் புரட்சி நடந்த
பிறகு தமிழ் மக்கள் அனைவரும் தனியாக பிரிந்து
செல்கிறோம் என்கிற கோரிக்கையை வைக்கும் போது
புதிய ஜனநாயக அரசு அதை அனுமதித்து அதற்கு வழிவிடும்,
மேலும் உதவிகள் செய்யும்.ஆனால், அப்போதும் உங்களைப்
போல நாலு பேர் இருப்பார்கள், அவர்கள் கேட்பதால் தனி
நாடு கிடைக்காது. காஷ்மீரி, மணிப்பூரிகளைப் போல
தமிழ் மக்கள் அனைவரும் கேட்கும் போது தான்,
அது தமிழ் தேசிய இனத்தின் ஒரு தீவிரமான
இனப்பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் தான் பிரிந்து
செல்வது அனுமதிக்கப்படும்.இதை இப்படி நேர் வழியில்
புரிந்து கொள்ளுங்கள்.

 
At October 9, 2009 at 5:23 AM , Anonymous Anonymous said...

//இந்தித் தேசிய இனத்துடனும், மற்ற அயல் தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசிய இனம் ஐக்கியம் பேண வேண்டும் என்று விரும்பினால், தமிழ்நாட்டைப் போல ஓரளவாவது தேசிய இன உரிமைகளை பேசக்கூடிய புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சிகளை மற்ற தேசிய இனங்களில், ம.க.இ.க. போன்ற ”அகில இந்தியப் புரட்சி” கனவு காணும் அமைப்புகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை யார் தடுத்தார்? ஏன் இதனை இவர்களால் செய்ய முடியவில்லை? உத்திரப்பிரதேசத்திலும், ஹரியானாவிலும் சென்று இந்தித் தேசிய இன மக்களிடம் பாட்டாளி வகுப்பு சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுங்கள். யார் தடுத்தது?//


நம் நாட்டில் நிலவும் யதார்த்தமான பொருளாதார
சுரண்டல், வர்க்க விடுதலை,இன பிரச்சனைப் பற்றி
முதலில் தமிழ் தேசியவாதிகளுக்குத்தான்
வகுப்பெடுக்க வேண்டியுள்ளது.

மற்ற தேசிய இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த
வேண்டும் என்று நாங்கள் சொல்வது ஒடுக்குமுறைக்கு
உள்ளாகும் ஒரு இனம், இனப் பிரச்சனையை முன்
மொழிந்து தனி தேசியம் கோருபவர்களுக்காக இருந்தால்
அவர்களுக்கானது. தமிழ் தேசியவாதிகள் “தமிழினம்
ஒடுக்கப்படுகிறது. எனவே தனித்தமிழ்நாடு” என்று
தனியாக கூப்பாடு போடுவதால் இந்தியாவில் தேசிய
இனப்பிரச்சனைக்கான தீர்வாக சாத்தியமான அறிவியல்
பூர்மான மார்க்ஸிய வழியையே நாங்கள் கூறுகிறோம்.

இதுவே எங்கள் வேலையும் அல்ல.கொள்கையும்
அல்ல.எங்கள் நோக்கம் உழைக்கும் மக்களை
சுரண்டலிலிருந்து விடுவிக்கும் ஒரு புதிய ஜனநாயக
சமூகத்தை படைப்பது தான்.சாதிய கொடுமைகளிலிருந்து
தாழ்த்தப்பட்ட மக்களை விடுவிக்கும் சமூக விடுதலை,
ஒடுக்கப்படும் தேசிய‌ இனங்களின் விடுதலை. இதற்கு
நாங்கள் முன் மொழிவது தான் “புதிய ஜனநாயக சமூகம்”.

புதிய ஜனநாயக புரட்சியை சாத்தியமாக்குவதற்காக
மற்ற மாநிலங்களிலுள்ள நேர்மையான கம்யூனிஸ்ட்
கட்சிகளுடன் எமக்கு ஐக்கியம் உள்ளது. ஐக்கியம்
இல்லாத இடங்களில் புரட்சியை சாதிப்பதற்காக‌
ஐக்கியத்தை ஏற்படுத்திக்கொள்வது தான்
கம்யூனிஸ்டுகளாகிய எங்களின் கடமை.

நம் நாட்டில் புதிய ஜனநாயப் புரட்சியின் மூலம்
மட்டும் தான்,ஒடுக்குப்படும் தேசிய இங்களுக்கான
விடுதலை, நிலப்பிரபுத்துவத்திலிருந்து உழைக்கும்
மக்களின் வர்க்க விடுதலை, சாதிக்கெதிரான
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை என்பது போன்ற
அனைத்து அர்சியல்,சமூக,பொருளாதார
பிரச்சனைக்களையும் தீர்க்க முடியும்.

 
At October 9, 2009 at 5:24 AM , Anonymous Anonymous said...

ஆகவே இதில் தேசிய இன விடுதலை என்பதும் ஒரு
அம்சமே அன்றி அதுவே பிரதானமானது அல்ல.
பல ஆண்டுகளாய் போராடிக்கொண்டிருக்கும் காஷ்மீர்,
வடகிழக்கு மாநில மக்களின் தேசியப் இனப் பிரச்சனைக்கு
தீர்வு என்பது தன்னிச்சையான இந்தியாவிற்கெதிரான
அவர்களின் போராட்டங்களினால் இதுவரை கிடைக்கவில்லை.
இனிமேலும் அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயாமல்
இருப்பார்களேயானால், இந்நாட்டு சூழலுக்கு பொருந்தக்கூடிய
புதிய ஜனநாயக புரட்சியை விடுத்து மற்ற தேசிய
இனங்களுடனான ஐக்கியத்தை கட்டியமைக்காமல்
போராடுகிறார்கள் என்றால் அவ்ர்களின் தேசிய
இனப்பிரச்சனை புரட்சி வரை தீர்வதற்கு சாத்தியமில்லை.
அவர்களுக்கு சொல்லும் அதே விடயத்தை தான் நாங்கள்
தமிழ் தேசியவாதிகளான உங்களுக்கும் சொல்கிறோம்.
உண்மையிலேயே தமிழ் தேசிய தாகம் தமிழ் நாட்டு
தமிழர்களின் ஒட்டு மொத்த தாகமாகவும் தனித்தமிழ்நாடு
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாகவும்
இருந்தால், அது இந்திய ஆளும்வர்க்க கட்டமைப்பை பல
தேசிய இனங்களின் கூட்டிணைவுடன் எதிர்க்கும்
கட்டமைப்பின் மூலமே சாத்தியம்.

நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் தேசிய இனவிடுதலை
மட்டும் எங்களின் தலையாய கோரிக்கையன்று. நாங்கள்
உழைக்கும் மக்களின் சாதிக்கெதிரான,சுரண்டலுக்கெதிரான
விடுதலையை அடையும் உழைக்கும் மக்களின் வர்க்க
சர்வாதிகாரத்தை கட்டியமைக்க போராடுகிறோம். இதற்காக
மார்க்ஸிய வழியில் புதிய ஜனநாயக புரட்சியையே இதற்கு
தீர்வாக முன்வைக்கிறோம். இதில் தேசிய இனங்களின்
விடுதலையும் உள்ளடங்கியே உள்ளது. தனி தேசியம்
என்பது பெரும்பான்மை மக்களின் தேவையாக இருந்தால்,
அதுவும் புரட்சிக்கு பிறகே அது சாத்தியம்.இவ்வாறு தான்
ரஷ்ய புரட்சிக்கு பிறகு தோழர் லெனின் நீங்கள் மேற்க்கூறிய
காலத்தில் செய்தார்.

நாங்கள் இனவாதிகள் அல்ல,மார்க்சியவாதிகள்.
ஒரு மார்க்சியவாதியை மார்க்சிய க‌ண்ணோடம் தான்
(வர்க்க க‌ண்ணோடம்) வழி நடத்த வேண்டுமே அன்றி
இனவாத கண்ணோட்டம் வழி நடத்தக் கூடாது.எனவே
எமது கோரிக்கை மற்ற தேசி இனங்களிடமிருந்து பிரிந்து
செல்லும் தமிழ்தேசியம் அல்ல.
மாறாக‌ புதிய ஜனநாயகப்புரட்சிக்கான வர்க்க சேர்க்கையே
ஆகும். நாம் இந்தியாவில் ஐக்கியத்தை முன் மொழிகிறோம்
எனில் அது புதிய ஜனநாயகப்புரட்சிக்காகத் தான்.
நாம் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறையை மட்டும்
காணவில்லை. இங்கு கொடூரமான பார்ப்பனீய சாதிய‌
ஒடுக்குமுறை நிலவுகிறது,தரகு முதலாளிகள்
நிலப்பிரபுக்களின் வர்க்க ஒடுக்குமுறை நிலவுகிறது.
இந்த ஒடுக்குமுறைகளுடன் இந்து தேசியத்தின் இன
ஒடுக்குமுறையும் நிலவுகிறது, அவ்வளவு தான்.
அதுவே முக்கிய ஒடுக்குமுறை என்று நாம் கருதவில்லை.
இந்த அனைத்து ஒடுக்கு முறைகளிலிருந்தும் உழைக்கும்
மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு
புதிய ஜனநாயகப்புரட்சி தான் தீர்வு என்பதை முன்
வைக்கிறோம்.மற்ற ஒடுக்குமுறைகளுடன் தேசிய
இனங்கள் மீதான ஒடுக்குமுறையையும் நாம் ஒரு
அம்சமா பார்க்கிறோமே அன்றி அதையே பிரதான
அம்சமாக பார்க்கவில்லை.அவ்வாறு நோக்குவதற்கு
அடிப்படையான‌ சூழலும் இங்கு நிலவவில்லை.
புதிய ஜனநாயக சமூகத்தில் சாதி,வர்க்க
ஒடுக்குமுறைகளுடன் இன ஒடுக்குமுறைக்கும் முடிவு
கட்டப்படும்.

தோழர் லெனினை மேற்கோள் காட்டும் தமிழ்
தேசியவாதிகள்,தோழர் லெனினுடைய‌ தேசிய
இனம் பற்றிய நூல்க‌ளை கொஞ்சமாவது வாசித்துப்பார்க்க
வேண்டும். அவ்வாறு வாசிப்பதன் மூலம் தேசிய இனம்
பற்றிய தமது பழைய மூட நம்பிக்கைகளிலிருந்து
கொஞ்சமாவது விடுதலை பெற்று வெளியில் வர
முயற்சிக்க வேண்டும்.

 
At October 9, 2009 at 5:24 AM , Anonymous Anonymous said...

/////”அனைத்திந்தியப் புரட்சி” பேசுகின்ற ம.க.இ.க. போன்ற சீர்குலைவு சக்திகள், இது போன்ற தேசிய இனங்களுடனான குறைந்த பட்ச ஒருங்கிணைப்பு, குறைந்த பட்ச பொது வேலைத் திட்டம் என்பதைக் கூட வைக்காமல், அவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு தம் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பியும், ”இனவாத” முத்திரை குத்தியும் தம் அணிகளை மகிழ்ச்சிப் படுத்திக் கொள்கின்றன./////


“உலகில் எல்லா இடங்களிலும் தமிழன் அடிவாங்கினான்
ஆனால் ஈழத்தில் மட்டும் திருப்பி அடித்தான்” என்று
புள‌ங்காகித்து இங்கேயும் தமிழ் தேசியம் கோரும் தமிழ்
தேசியவாதிகளுக்கு இது இலங்கையல்ல! தெற்காசிய
ரவுடி இந்தியா! என்று புரியவைக்க எவ்வளவு மல்லுக்கட்ட
வேண்டியிருக்கிறது! தமிழ் தேசிய போதையில் இந்தியாவை
பற்றி சரியான பார்வையில்லை போலும்!
அதற்கு நாம் என்ன செய்ய ?

இதை நாங்கள் சொன்னால் மண்ணை வாரி இரைத்து
சாபம் இடாத குறையாக எங்களை சாடுகிறார்கள்
தமிழ் தேசியவாதிகள்.

இப்போதும் சொல்கிறோம், தமிழ் தேசியம் என்பது
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாக
இருக்கும் பட்சத்தில், அப்போதும் இந்தியாவிற்கெதிரான
பல தேசிய இனக்களினால் கட்டியமைக்கப்பட்ட மார்க்சிய
வழியிலான ஐக்கியத்தின் போராட்டமின்றி விடுதலை
சாத்தியமில்லை.ஆனால் இன்று யதார்தத்தில்
பெரும்பான்மை தமிழ் மக்களின் கோரிக்கையாக
தமிழ் தேசியமா இருக்கிறது ? இல்லை! ஆனால்
ஈழ தமிழ் மக்களை பார்த்து அவர்களின் உண்மையான
உணர்வை பார்த்து தமிழ் தேசியவாதிகள் இந்தியாவிலும்
செயற்கையாக இவ்வுணர்வை ஏற்படுத்த முயன்றால்,
அவர்களுக்கு நாங்கள் சொல்வது இந்தியாவையும்
இலங்கையையும் ஒப்பிட்டு, ஈழமக்களின்
ஒடுக்குமுறையையும், தமிழ் நாட்டுத்தமிழர்களின்
ஒடுக்குறையையும் ஒப்பிட்டு பிறகு புலிகளையும்
பார்த்து இங்கிருக்கும் தமிழ்தேசியவாதிகளான நீங்கள்
சூடு போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் அது என்றைக்குமே
சாத்தியமாகாது, கற்பனாவாதமாகவே க‌ரைந்து போகும்.
இதை நாம் சொன்னால் உங்களுக்கு கசக்கத்தான் செய்யும்.
என்ன செய்வது நோயை முறிக்கும் மருந்தும் கற்பனையை
தகற்கும் உண்மையும் கசக்கத்தான் செய்யும். ஏற்பது
ஏற்காததும் உங்கள் விருப்பம். மற்றபடி எங்கள்
தோழர்களுக்கு போராட்டம் தான் மகிழ்ச்சி,
உங்களுக்கு முத்திரை குத்துவதால் மகிழ்ச்சியடைவது
எம்மைப் பொருத்தவரை கேவலமானது!

 
At October 9, 2009 at 5:25 AM , Anonymous Anonymous said...

///////////
சத்தீஸ்கர், ஆந்திரம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மாவோயிஸ்டுகள், மக்கள் யுத்தக் குழுவினர் உள்ளிட்ட போராளி அமைப்புகளில் யாருடனாவது உங்களுக்கு தோழமை உண்டா? எல்லோரையும் சகட்டு மேனிக்கு ”விமர்சனம்” என்ற பெயரில் அவதூறு செய்து விட்டு இறுதியில் ”இந்தியப் புரட்சி” என்ற கனவுடன், தனிமைப்பட்டிருப்பது நீங்கள் தான்.////////


புலியிலிருந்து மாவோயிஸ்டுகள் வரை யாரையும்
விமர்சிக்க கூடாது என்கிறீர்கள்.அப்படி விமர்சிப்பதால்
தான் நாங்கள் தனிமைப்பட்டு போய்விட்டோம்
என்கிறீர்கள்,ந‌ல்லது நாங்கள் அப்படித்தான் விமர்சனம்
செய்கிறோம்,இனிமேலும் அப்படித்தான் விமர்சனம்
செய்வோம். அதன் காரண‌மாக நாங்கள் தனிமைப்பட்டால்
அது எங்களுடைய பிரச்சனை, அதனால் எங்களுக்குத்
தான் நட்டம், எனவே அதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்,
எங்களுக்காக நீங்கள் ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்.
மாவோயிஸ்டுகளும் புலிகளும் செய்கிற தவறுகள் ஒன்றும்
சிறு பிள்ளைத்தனமானது அல்ல. அவர்களுடைய தவறுகள்
மக்களுடைய விடுதலையை தாமதப்படுத்துகிறது.
புரட்சியை பின்னுக்கு இழுக்கிறது. எனவே மக்களுக்கு எதிரான
தவறுகளை வேடிக்கை பார்ப்பது மக்களுக்கு செய்கின்ற
துரோகம்,அந்த தவறுக்கு துனை போகின்ற செயல் எனவே
நாங்கள் அதை கடுமையாகத் தான் விமர்சிப்போம்.
மாவோயிஸ்டுகளுடன் எமக்கு எத்தகைய ‘தோழமை’
இருக்கிறது என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

 
At October 9, 2009 at 5:26 AM , Anonymous Anonymous said...

மேலும் பின்னூட்டங்களுக்கு எமது தளத்தை தொடரவும்.

http://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#comment-401

 
At October 13, 2009 at 8:38 AM , Anonymous Anonymous said...

அதிரடியான் உயர்திரு சமூகத்துக்கு,

ஐயா நாங்கள் கொங்கு நாட்டு மலை வாழ் குற இனத்தை சேர்ந்தவர்கள்.தமிழ் நாட்டில் எங்களுக்கு சொந்தமாக ஒரு மலை கூட இல்லாமல் நாங்கள் ஒடுக்கப் படுகிறோம்.எங்க இனத்துக்கு குறைந்தது 4 மலைகளையாவது ஒதுக்கி, ஒரு சுதந்திர குற தேசம் வாங்கித் தாருவீர்களா என்று உருகி கேட்டுக்கிறேனுங்கோ.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home