Wednesday, October 7, 2009

விவாதம்: இந்திய நாட்டில் தேசிய இன ஒடுக்குமுறையின் வகை - பகுதி 4

சர்வதேசியவாதிகள்: ////////////இந்த நாட்டில்(இந்தியா) ஒடுக்கும் தேசிய இனம் என்கிற சிறப்புத்தன்மை இல்லை. இந்தி தேசிய இனமும் கூட ஒடுக்கப்படுகிற இனம் தான். மாறாக அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குவது இந்து தேசியமும், அதை கட்டியமைத்த பார்ப்பன பனியா கும்பல் தான். இந்தி தேசிய இனம் தான் ஒடுக்கும் இனம் எனில் அது எவ்வாறு என்று விளக்க முடியுமா?////////////


ஆரிய இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது நேரடியான பெருந்தேசிய இன ஒடுக்குமுறை வகை சார்ந்த ஒடுக்குமுறை அல்ல. மாறாக, இது கட்டமைப்பு ஒடுக்குமுறை எனப்படுகின்ற Structural Opression என்ற வகையிலான ஒடுக்குமுறையாகும். இதற்கு பின்புலமாக இந்தித் தேசிய இனம் உள்ளது என்பதே எமது வரையறுப்பு. குற்றச்சாட்டு.


அதாவது, ஒர் இனத்திற்கு கூடுதல் நலன் பயக்கக்கூடிய ஓர் அரசியலமைப்பைக் கொண்டு அதன் கீழ் வாழும் பல்வேறு தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தி ஒடுக்குகின்ற அரசின் கட்டமைப்புகளை கொண்டு நடைபெறும் ஒடுக்குமுறை இது.


இந்தியத் தேசிய அரசால், இந்தித் தேசிய இனம் ஒடுக்கப்படுவதென்பது இன ஒடுக்குமுறையை மையமாகக் கொண்ட ஒடுக்குமுறை வடிவம் அல்ல.


சிங்கள இனவெறி அரசு எப்படி ஈழத்தமிழர்களை ஒடுக்கிறதோ அதைப் போல, இந்திய அரசு இந்தித் தேசிய இனத்தை ஒடுக்குவதில்லை.


மாறாக, இந்தித் தேசிய இனத்திற்கு இந்தியத் தேசிய அரசு ஏற்படுத்துகின்ற ஒடுக்குமுறை என்பது ஒரு தேசிய முதலாளிய அரசு, அதன் இறையாண்மையின் கீழ் வாழ்கின்ற தம் மக்களுக்கு எதிராக தொடுக்கும் ஒடுக்குமுறை வகையைச் சேர்ந்தது இது. இதனை தேசிய இன ஒடுக்குமுறை என்று கூறுவதே முட்டாள்தனம் ஆகும்.


இந்தித் தேசிய இனத்தின் மொழியான ”இந்தி” இந்தியத் தேசிய அரசின் மொழியாக வழங்கப்பட்டு, அனைத்து தேசிய இனங்கள் மீதும் திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில், இந்தித் தேசிய இனத்திற்கு அது ஆதாயமானதாகும். இந்தி மொழியுடன் சமரசம் கொள்ளாத மற்ற தேசிய இனங்களுக்கு அது பாதகமானதாகும். இச்சூழலில், ”இந்தித் தேசிய இனமும் ஒடுக்கப்படுகின்றது” என்பது எங்காவது பொருந்துமா?


”இந்தித் தேசிய இனமும் இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்றது” என்ற இந்தக் கூற்றை, ”அமெரிக்க மக்கள் அந்நாட்டு முதலாளி அரசால் ஒடுக்கப்படுகின்றனர்” என்ற கூற்றுக்குத் தான் எடுத்துக்காட்டாக கூற முடியுமே தவிர, ஈழத்தமிழர்கள் சிங்கள அரசால் ஒடுக்கப்படுவதைப் போலவே, இந்தித் தேசிய இனத்தையும் இந்திய அரசு ஒடுக்குகின்றது என்று கூற முடியாது. கூறவும் கூடாது.


இந்தித் தேசிய இனத்திற்கு இந்திய அரசு என்பது, அதன் தேசிய முதலாளிய அரசாகும். அதனால் இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்தித் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களை பொருளியல் ரீதியில் சுரண்டுகின்றன. ஒடுக்குகின்றன.


ஆனால், இந்தித் தேசிய இனத்தோடு சமரசம் செய்து கொள்ளாத காசுமீர், மணிப்புர், தமிழ்நாடு உள்ளிட்ட அயல் தேசிய இனத்தவர்களுக்கு இந்திய அரசு என்பது ஆதிக்க இந்தித் தேசிய இனத்தின் இனவெறி அரசாகும். இத்தேசிய இனங்கள் மீது இந்திய அரசு செலுத்தும் ஒடுக்குமுறை என்பது தமது இந்தி ஆதிக்கக் கட்டமைப்பின் கீழ்படியாத தேசிய இனங்களை மீதான இனவெறியில் பிறப்பதாகும். இந்த இனவெறியின் வழியே, கீழ்படியாத தேசிய இனங்கள் மீது இந்திய ஆளும் வர்க்கங்கள், அவர்தம் தாயகங்களைப் பறித்து தமது பொருளியல் சுரண்டலை விரிவுபடுத்துகின்றனர்.


இதிலிருந்து நாம் சொல்வதன் சாரம் இது தான்.


ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்துடன், கலந்து உருவான ”இந்தி” மொழி பேசுகின்ற மக்களுக்கு பெருமிதத்தையும், இறையாண்மையையும் வழங்கக்கூடிய ஆரிய இனவெறி நாடே இந்தியாவாகும். இந்தி தேசிய இனத்திற்கு ”இந்தியா” தேசிய அரசாகவும், மற்ற தேசிய இனங்களுக்கு ”இந்தியா” இந்தி ஆதிக்க இனவெறி அரசாகவும் விளங்குகின்றது. இந்தி இதன் தேசிய மொழியாக உள்ளது என்பதால் இங்குள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன. இந்தியுடன் சமரசம் செய்து கொண்டோர் மட்டுமே தேசிய முதலாளிகளாக வெளிப்படுகி்ன்றனர். குஜராத், பீகார் உள்ளிட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த முதலாளிகளும், மக்களும் அவர்தம் சொந்த மொழிகளை மறந்து இந்தித் தேசிய இனத்தோடு சங்கமித்து ஒற்றைத் தேசிய இனமாகவே வளர்ந்து வருகின்றனர். இவ்வாறு, வடநாட்டில் உள்ள பல்வேறு தேசிய இனத்தவர்களும் பெரும்பாலும் இந்தித் தேசிய இனத்துடன் இணக்கம் கொண்டே வாழ்கின்றனர். இவர்களுக்குள் தேசிய இனம் தொடர்பாக எவ்வித முரண்பாடுகளும் பெரிதாக இதுவரை எழுந்ததில்லை.


இவ்வாறு வடநாட்டு பெரும்பான்மையினராக வாழக்கூடிய இந்தி மொழி பேசும் மக்களினது கட்சிகளும், முதலாளிகளும் ”இந்தித் தேசிய இனம்” என்ற ஒரு ”மொசாக்” தேசிய இனமாக உருபெற்றிருக்கின்றனர். இது நேரடியான ஒரு பெருந்தேசிய இனம் இல்லையென்றாலும், இது இந்தியத் தேசியம் என்ற ஒடுக்குமுறை கருத்தியலை மேலும், வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மையமாகக் கொண்ட தேசிய இனங்களின் கூட்டாகும்.


இந்தித் தேசிய இனத்தின் மொழியாக விளங்கும் இந்தி மொழியே இந்தியத் தேசிய அரசின் ஆட்சி மொழியாக விளங்கி, அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகின்றது. இந்தித் தேசிய இனத்துடன் சமரசம் செய்து கொண்ட மற்ற தேசிய இனங்களும் கூட இவ்வொடுக்குமுறை மைய முரண்பாடாக்கி, போராட்டங்களையோ, இயக்கங்களையோ கட்டியெழுப்பவில்லை.


மாறாக, ஆரிய மரபினத்திற்கு தொடர்பே இல்லாது விளங்குகின்ற காசுமீரி தேசிய இனத்தவர்கள், நாகர் மரபினத்தைச் சேர்ந்த நாகா தேசிய இனத்தவர்கள், மங்கோலிய மரபினத்தைச் சேர்ந்த அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகள், பஞ்சாப் தேசிய இனத்தவர்கள், தமிழர் மரபினத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆகியோர் தான் ஆரிய இனவாத இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.


ஆனால், இந்திய அரசின் இதே அளவு ஒடுக்குமுறையை உள்வாங்கும் கேரளா, ஆந்திரம், ராஜஸ்தான், மகாராட்டிரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏன் இந்திய அரசுக்கு எதிரான சுயநிர்ணய உரிமைக் குரல்களும், போராட்டங்களும் எழவில்லை என்பதை ம.க.இ.க.வினர் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்?


அங்கெல்லாம் அம்மக்கள் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை உணர வேண்டிய தேவை ஏன் இதுவரை எழமாலிருக்கிறது? தமிழகத்தில் உள்ளது போலான, ”இந்திய அரசு நம் தேசிய இனத்திற்கு தொடர்பில்லாத அரசு” என்ற சிறு அளவிலான உணர்வு கூட அங்கே எழாமல், இன்னும் ”இந்தியத் தேசியக்” கட்சிகளின் பிடியில் இருக்கின்றனவே இது ஏன்?


ஓரளவு தேசிய இன உணர்வு எழுந்த காலகட்டத்தில், பெரியார் ”திராவிட நாடு” கேட்ட பொழுது கூட, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட தேசிய இனத்தவர் அதில் ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் கண்டு நொந்த பிறகு தான் ”தனித் தமிழ்நாடு” தான் நமது இலக்கு தனது இறுதி கூட்டத்தில் கூட பெரியார் கூறினார். இதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


காசுமீர், மணிப்புரை போல் தமிழ்நாட்டில் தேசிய இனப் போராட்டத்தை முழு வீச்சில் தொடங்கி நடத்தப்பட்டு தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உழைக்கிறோம். போராடுகிறோம். இதே நேரத்தில், அயல் தேசிய இனங்கள் நம் தமிழ்த் தேசத்துடன் ஐக்கியப் படுவதற்கான சிறிய அளவிலான முயற்சிகளையும் எடுப்பதில்லை. ஆனால், இந்திய அரசின் பகைமை உண்டாக்கும் போக்கை உணராமல் இந்தியத் தேசிய அரசிற்கு பக்கபலமாக நிற்கின்றனர். இந்நிலையில், நாம் கேரளாவுடனும், கர்நாடகவுடனும் தொடர்ந்து ஐக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாம்.


இந்த அயல் தேசிய இனத்தவர், எல்லோரும் தம் இனம் ஒடுக்கப்படுகின்றது என்று உணர்ந்து மெல்ல போராடுவதற்காக நாம் தான் முன்முயற்சி எடுக்க வேண்டுமாம். அதுவரை நாம் நம் தேசிய இன விடுதலைக்குப் போராடாமல், இந்தியத் தேசிய அரசின் ஒடுக்குமுறையில் வெந்து சாகவேண்டுமாம். இது தானே உங்களைப் போன்றோரின் விருப்பம்.

இந்த விருப்பத்தைக் கொண்டிருப்பதால் தான் நாம் உங்களை ”சீர்குலைவு” சக்திகள் என வரையறுக்கிறோம்...

Labels: , ,

1 Comments:

At October 7, 2009 at 7:25 AM , Anonymous Anonymous said...

திராவிட நாடு கோரிக்கைக்கு மலையாளத்தானும் தெலுங்கனும் கன்னடனும் வராத காரணத்தால்
தனித் தமிழ் நாடு என்பீர்கள்.

தனித்தமிழ்நாடு கோரிக்கைக்கு சில சாதிகளோ, மாவட்டங்களோ போராட வராதபட்சத்தில்
பெரியாரும் இன்று உயிரோடு இல்லாத பட்சத்தில் உங்களது கோரிக்கை என்னவாக முன்வைப்பீர்கள்.
(உம். தலித் மக்கள் யாரும் தனிதமிழ்நாடு கோரவில்லை. வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் கூட இந்த கோரிக்கை இல்லை)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home