Monday, October 5, 2009

விவாதம்: தமிழ்த் தேசியம் – வரலாற்று அடிப்படை

ம.க.இ.க.வினரின் விருப்பப்படி VRINTERNATIONALISTS (தளம்: http://vrinternationalists.wordpress.com/) என்ற தளத்தில் விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நான் இடுகின்ற பதில்களை இங்கும் ஈடுகின்றேன். விவாதம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக நான் எழுதிய முதல் பகுதி இது.

தமிழ்த் தேசியம் - வரலாற்று அடிப்படை
உலகின் மூத்த இனமாக தமிழினம் விளங்குகின்றது. இது பல்வேறு ஆய்வுகளாலும நிறுப்பட்ட உண்மை. முன்பொரு காலத்தில் தற்பொழுது உள்ள இந்திய நிலப்பரப்புகள் முழுவதிலும் ”தமிழர்” என்ற மரபினம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

பின்னர் வந்த, வந்தேறிகளான ஆரியர்கள் தமிழர்களின் சிந்துசமவெளி நாகரீகங்களை அழித்து சமஸ்கிருத மேலாண்மையை புகுத்தி, தமிழர்களின் இடங்களை பாரம்பர்யப் பிரதேசங்களைப் கைப்பற்றிக் கொண்டனர். இதற்கான ஆதாரங்களாகவே ருக் வேதம் உள்ளிட்டவை விளங்குகின்றன.

தமிழினம் பல்வேறு குறுநில மன்னர்களாலும், பேரரசுகளாலும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்த நிலையில், ”தமிழ்” என்ற மொழி தமிழர்களை உளவியல் ரீதியாக ஒன்றிணைத்திருந்தது.

தொல்காப்பியத்திற்கு விளக்கமளித்து எழுதிய இளம்புரனார், ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கு எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவாறு எழுதினார்.

”நும் நாடு யாதெனில் தமிழ் நாடு என்க!”

”உன்னுடைய நாடு தமிழ்நாடு” என்று ”உள்ளதை உள்ளபடிச் சொல்” என்ற விதிக்கேற்ப அன்றைக்கே உரைத்திருக்கின்றனர்.

”வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்”

இதுவும் தமிழ்நாடு என்ற நிலப்பரப்பிற்கான சங்க காலத்தில் வழங்கப்பட்ட ஒர் வரையரையே எனலாம்.

லெமூரியர் கண்டம் என்ற நிலப்பரப்பு முழுவதும் தமிழர்கள் வாழ்ந்திருந்தனர். இதற்கான சான்றுகளை முனைவர் க.ப.அறவாணன் தனது ஆய்வு நூல்களின் படி நிறுவியுள்ளார். தற்பொழுதிருக்கும், தமிழ்நாடும் இலங்கைத் தீவும் லெமூரியா கண்டத்தின் பிரியாத நிலப்பரப்புகளாக விளங்கிற்று. இவ்வாறு விளங்கிய நிலப்பரப்புகள் கடல் கோள்களால் பிரிக்கப்பட்டே இலங்கைத் தீவு, தனியாகவும் தமிழ்நாடு தனியாகவும் பிரிய நேர்ந்தது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்னர் வந்த வந்தேறிகளாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும் அடிமைப்படுத்தப்பட்டனர். இலங்கைத் தீவின் தமிழர்கள் சிங்களர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர். இன்றைக்கு ”இந்தியா” என்ற ஒரு செயற்கை நாட்டில், ஒரு மாநிலமாகக் குறுக்கப்பட்டு, மொழிச் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அவர்களின் விடுதலைக்கான தத்துவமாகவே, வழிகாட்டு நெறியாகவே, ”தமிழ்த் தேசியம்” உள்ளது.

எம்மைப் பொறுத்தவரை, ”இந்தியா” என்பது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூட்டிய காலனிப் பெயர். பார்ப்பன பனியாக்களும் பெருமுதலாளிகளும் விரும்பி உருவாக்கிய ஒர் சந்தை. பார்ப்பனர்களும், பார்ப்பனிய பாதந்தாங்கிகளும் இந்தியத் துணைக் கண்ட நிலப்பரப்பில் அங்கம் வகித்த பல்வேறு தேசிய இனத்தவர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டிக் கொழுக்கவும் உருவாக்கியக் கட்டமைப்பே ”இந்தியா”. அந்த ”இந்தியா” என்ற நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும், தற்பொழுதுள்ள இந்திய ஆளும் வர்க்கம் (பார்ப்பனர்கள், பனியாக்கள், பெருமுதலாளிகள்) ஒரு போலித்தனமான ”இந்தியத் தேசியம்” என்ற இல்லாத தேசியத்தை கட்டமைத்தது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட இந்தியத் தேசியம் என்ற கருத்தியலை ஆரியப் பார்ப்பன இந்து மத வெறி சக்திகளையும், பெரு முதலாளிகளின் நலன் காக்கும் சந்தைகளையும் நன்கு வளர்த்து வருகின்றது. எனவே இந்தக் கட்டமைப்பு உடைத்தெறியப்பட வேண்டும் என்பது யம் நிலைப்பாடு.

உடைத்தெறிப்பட்டப் பிறகு, இந்நிலப்பரப்பில் அமைந்துள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை வழங்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. இந்நிலப்பரப்பில், வாழ்கின்ற அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்கும் உரிமையை யார் வைத்திருப்பார்கள்? மார்க்சிய லெனினியப் புரட்சகர சக்திகள் ”இந்தியா” என்ற இந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் தற்பொழுதுள்ள ஒடுக்குமுறையை ஒழித்து விடலாம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது என்று நாம் தெளிவாகக் கூறுகிறோம்.

முதலில் இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும், ”இந்தியன்” என்ற போலித்தனமான கருத்தியலை மிருகத்தனமாக இந்திய ஆளும் வர்க்கம் வளர்த்துவிட்டுள்ளது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். இந்தக் கட்டமைப்பு தகர்க்கப்படாமலிருக்க, தேசிய இனங்களுக்குள் முரண்பாடுகளை வளர்த்து விட்ருப்பதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியே ஆகும்.

இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சமமான அளவில் இருந்ததில்லை. காவிரி நீர்ப் பிரச்சினையிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சினையிலும் கன்னடத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது இந்திய அரசு. முல்லைப் பெரியாறு நீர் சிக்கலில் கேரளத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றது இந்திய அரசு. பாலாறு அணை சிக்கலில் ஆந்திரத்திற்கு ஆதரவாக வாய் மூடி நிற்கிறது இந்திய அரசு. தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படும் பொழுது கூட, அதனை ஆதரித்து குதூகலிக்கிறது இந்திய அரசு.

ஈழத்தமிழர்கள் மீது இந்திய அரசு நடத்திய இன அழிப்புப் போரை நிறுத்து என்று தமிழகம் ஒன்று திரண்டு போராடிய பிறகும், அப்போரை தொடர்ந்து நடத்தி ஈழத்தமிழினத்தை இந்திய அரசு கொன்றழித்தது.

இந்திய அரசின், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறைகளைக் கண்டு காசுமீரிலும், அசாமிலும், மிசோரத்திலும் அந்தந்த தேசிய இனத்தவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வாறான தேசிய இனப் போராட்டங்கள் மற்ற தேசிய இனங்களில் நடைபெறவுமில்லை.

அதே சூழலில், ”தமிழர்கள்” மீது இந்திய அரசின் ஒடுக்குமுறை என்பது பல்வேறு நடவடிக்கைகளாலும் தொடரப்பட்டு வருவதும் மறுக்கப்படாத உண்மை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவெனில், ”இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பான இந்திய அரசு” என்பது ஆரியர்கள், பார்ப்பனர்கள், பனியா முதலாளிகள் உள்ளிட்டவர்களாலும், அந்த கும்பலுடன் சமரசம் செய்து கொண்ட தேசிய இனத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட அரசே என்பதால் இந்திய அரசை ஆரிய இனவெறி அரசு என்று நாம் வரையறுக்கிறோம்.

இந்தித் தேசிய இனமே ஆரிய இனவெறி அரசை வழிநடத்துகின்றது என்கிறோம்.

இந்துமதவெறிப் பண்பாடே இந்தியத் தேசியப் பண்பாடு என்கிறோம்.

இதற்கு மாற்றாக, ஜே.வி.ஸ்டாலின் வரையறுப்பின்படி ஒரு தேசிய இனமாக வளர்ச்சிப் பெற்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமக்குள்ள சுயநிர்ணய உரிமைப்படி, தமக்கென ஒரு தேசத்தை, குடியரசை நிறுவிக்கிக் கொள்ள வேண்டும் என்கிறோம். இதனை ”தமிழ்த் தேசியப் புரட்சி” என்ற இன விடுதலைப் புரட்சியே நடத்தி முடிக்கும் என நம்புகிறோம்.

இந்தியத் தேசியக் கருத்திலை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், முதலாளிகள் உள்ளிட்டோர் இப்புரட்சிக்கான எதிரிகள்.

தமிழ்த் தேசிய ஆதரவு சனநாயக சக்திகள், இயக்கங்கள், கட்சிகள் முதலியன இப்புரட்சிகான நேச அணிகளாக அணிவகுப்பர்.

மனித விடுதலைக்கான தத்துவமான மார்க்சியம், சாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்ட பெரியாரியம், அம்பேத்கரியம், உள்ளிட்டவற்றோடு சங்க காலம் தொட்டு நம் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வந்த அறநெறிக் கருத்துகள் ஆகியவையே இந்த லட்சியத்தை அடைந்திட உதவும்.

எனவே அத்தத்துவங்களை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்ப உபயோகித்து அவற்றைக் கொண்டு நமக்கான ஒரு சுயநிர்ணயமுள்ள ஒரு தனித் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனவே ”தமிழ்த் தேசியம்” என்ற இக்கருதாக்கம் படைக்கப்பட்டுள்ளது.

(இதன் மீது விவாதம் செய்யுங்கள்)..

மீண்டும் தொடர்வேன்..

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home