விவாதம்: அதிரடியானின் பதில்கள் பகுதி 2
ம.க.இ.க.வினரின் விருப்பப்படி VRINTERNATIONALISTS (தளம்: http://vrinternationalists.wordpress.com/) என்ற தளத்தில் விவாதம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் நான் இடுகின்ற பதில்களை இங்கும் ஈடுகின்றேன். விவாதம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக நான் எழுதிய முதல் பகுதிக்கு வந்த எதிர்வினைக்கு ஆற்றிய இரண்டாம் பதில் இது.
7:04 பிற்பகல் இல் அக்டோபர்1, 2009 மணிக்கு எழுதியது
”பார்ப்பன எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நாத்திக இயக்கம், தமிழகம் மட்டும் ‘இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்குள்’ வராமல் இருப்பது”
என இந்திய அரசால் தமிழகம் அதிகமாக ஒடுக்கப்படுவற்கு இது தான் காரணம் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளீர்கள். அந்த ”சிறப்புக் காரணங்களால்” தான் தமிழ்நாடு அதிகமாக ஒடுக்கப்படுவதாக நீங்களே ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள் பல.
தமிழ் இனத்தின் மீதான இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு இவ்வளவு சிறப்புக் காரணங்களும் அதன் பட்டியல்களும் தேவையில்லை. ”தமிழினம்” என்ற ஒற்றைக் காரணமே, இந்தியாவில் மட்டுமனி்றி, ஈழம் உள்ளிட்ட உலகில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் மீது இந்திய அரசின் பாசிச தேசிய இன ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு காரணமாக இருக்கின்றது என்பதே நமது கருத்து.
இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை அனைத்து தேசிய இனங்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ள நிலையில், தமிழ் இனத்திற்கு இது அதிகமாக இருக்கிறது என்று தான் நாம் சொல்கிறோமே, தவிர, தமிழ் இனத்திற்கு எதிராக மட்டும் தான் இந்திய அரசு தேசிய இன ஒடுக்குமுறை செலுத்துகின்றது என்று நாம் ஒரு போதும் வாதிடவில்லை.
இந்தியா என்ற கட்டமைப்பு என்பதே ஆங்கிலேயார்களால் உருவாக்கப்பட்டது தான். எவ்வளவு தான் புரட்சிகரமானதாக இருந்தாலும், அது முதலாளிகளுக்கும் சுரண்டும் பார்ப்பனிய பனியாக்களுக்கும் சாதகமானதாகவே இருக்கும் என்பது எம் கணிப்பு. ஏனெனில், தற்பொழுதுள்ள இந்திய நிலப்பிரப்பில், உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒற்றைப் புள்ளியில் இணைத்துப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் சூழல் நிலவவில்லை. இதற்குக் காரணம், இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறை என்பது அனைத்து தேசிய இனங்களுக்கும் சரி சமமானதாக இல்லை என்பதே எமது கருத்து.
இந்தியாவில், காசுமீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் மீது இந்திய அரசுக் காட்டுகின்ற வன்மமும், கர்நாடகத்தின் தேசிய இனத்திற்குக் காட்டப்படுவதில்லை.
முல்லைப் பெரியாற்று அணை மீது புதிய அணைக் கட்ட, மகிழ்ச்சியுடன் இந்திய அரசு வழங்கியிருக்கும் அனுமதி என்பது, மலையாளித் தேசிய இனத்தவர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.
குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் கூட, பாசிசப் பாசத்துடன் பொங்கி எழும் இந்திய ஆளும் வர்க்கங்கள், தமிழ்நாட்டு மீனவர்கள் நாயைப் போல சுட்டுக் கொல்லப்பட்டால் கூட கண்டுகொல்வதில்லை.
ஒருவேளை, குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லையைக் கடப்பதால் ஏற்படும் பிரச்சினையை பயன்படுத்தி, ”இந்திய – பாகிஸ்தான்” என்றுக் கூக்குரலிட்டு, இந்து மதவெறியைக் கட்டமைத்து ”இந்திய”த் தேசிய வெறியைக் கிளப்பி விடும் நோக்கம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருப்பதால் இதனை பெரிதுபடுத்துகின்றது என்று சொல்லாம்.
அப்படியெனில், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை பயன்படுத்தி இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பிவிட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு சிறு நொடி போதுமே. ஏன் அதனை இந்திய ஆளும் வர்க்கங்கள் செய்யவில்லை..?
ஏனெனில், இன்று மட்டுமல்ல வரலாற்றின் அனைத்து இடங்களிலும் தொன்று தொட்டே தமிழினத்திற்கு எதிரானதாகவே ஆரியம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இது மறுக்க முடியாத உண்மை. ஆரியத்தின் இன்றைய பாசிச சட்ட வடிவான ”இந்திய அரசு” என்ற ஒடுக்குமுறைக் கருவியும், அது பாதுகாக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களும் தொடர்ந்து இதைத் தான் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களின் மீதும் உலகமயம் ஏற்படுத்தியுள்ள பாய்ச்சல் வேகத்திலான ஒடுக்குமுறையை கைக் காட்டி, இது தான் இந்திய அரசின் சமமான ஒடுக்குமுறை என்று சொல்லாதீர். இந்த வரையறை தவறு.
தேசிய இனங்களிடையே பகைமை உண்டாக்கும் நோக்கும், இந்தியத் தேசிய அரசிற்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளும் நீங்கள், ஏன் அந்த பிழைப்புவாத நோக்கில் கூட இந்திய ஆளும் வர்க்கங்கள் தமிழினத்திற்கு ஆதரவாக நிற்க மறுக்கின்றன? இதனை எப்பொழுது பரிசீலனை செய்வீர்கள்..?
காவிரி சிக்கலில் கன்னட தேசிய இனத்தோடும், முல்லைப் பெரியாறு சிக்கலில் மலையாளி தேசி இனத்துடனும், பாலாறு சிக்கலில் தெலுங்கு தேசிய இனத்துடனும், உலகமயச் சுரண்டலில் ஏகாதிபத்தியங்களுடனும், இந்தியப் பாசிச அரசுக் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டை, தமிழ்த் தேசிய இனத்தை ஒடுக்குகின்றது என்பது தாம் நம் பிரதானக் குற்றச்சாட்டு. இவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் எனவே நினைக்கிறேன்.
இந்நிலையில், இத் தமிழ்த் தேசிய இனத்தில் தேசிய இன விடுதலைக்காக நாம் அணி திரள வேண்டும் என்று சொன்னால் அது எந்த வகையில் தவறானது?
தமிழினத்தின் மீது செலுத்தும் அதே அளவு ஒடுக்குமுறை தான் கேரளாவிற்கும், மற்ற தேசிய இனங்களுக்கும் செலுத்தப்படுகின்றது என நீங்கள் வாதாடுகிறீர்கள். அதே வேளையில், ”சிறப்புக் காரணங்கள்” என பட்டியலிட்டு தமிழகத்திற்கு இவ்வொடுக்குமுறை அதிகமானதாக இருக்கிறது என்றும் சொல்கின்றீர். ஏன் இந்த இரட்டை வேடம்? யாரைப் பாதுகாப்பதற்காக இந்த வேடம் தரித்து நிற்கின்றீர்..?
தேசிய இனப் போராட்டத்தை இன்னும் துவங்காத, கேரளம், கன்னடம், மகாராட்டிரம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியத் தேசியத்தின் பெயரால் நடைபெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அந்தந்த மாநிலங்களில் ஏதேனும், தேசிய இன உரிமைப் போராட்ட அமைப்புகள் எழுந்துள்ளனவா? ஏன் அவ்வாறு இதுவரை எழவில்லை?
தற்பொழுதுள்ள இந்தியாவில், காசுமீர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு, கன்னடம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் தான் தேசிய இன உரிமைக்கான போர்க் குரல்கள், ஓரளவாவது தெரியும்படி எழும்பியுள்ளன.
இந்திய அரசின் ஒடுக்குமுறை அனைவருக்கும் பொதுவானது என்றால், ஏன் கன்னடத்திலும், கேரளத்திலும், வேறு எந்த தேசிய இனத்திலும் தேசிய இன உரிமைக்கான போராட்டங்கள் எழவில்லை? அங்கெல்லாம் நாங்கள் கட்சி கட்டவில்லை அதானால் தான் எழவில்லை என்று சொல்லாதீர். பிறகு, அந்தந்த தேசிய இனங்கள் தான் அவர்களுக்கான தீர்வை முன் மொழிய வேண்டும் நீங்கள் சொல்வதை நீங்களே மீறுவதாகிவிடும் இக்கூற்று.
முதலில் இதனை மீளாய்வு செய்யுங்கள்.
Labels: ஈழம், ம.க.இ.க. விவாதம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home